மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள 60 வயதை நெருங்கும் ‘அபயாம்பிகை’ என்ற பெண் யானைக்கு ஓய்வு அளித்து, மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
வழக்கின் பின்னணி
மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மயூரநாதசுவாமி கோயிலில் ‘அபயாம்பிகை’ என்ற யானை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலின் ஆன்மீக மற்றும் வழிபாட்டு சடங்குகளில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அலோக் அஸ்வனி குப்தா என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: "மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகைக்கு தற்போது 60 வயதை நெருங்குகிறது. தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி, 60 வயதை எட்டிய வளர்ப்பு யானைகளுக்குப் பணி ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.
வயது முதிர்ந்த இந்த யானையை தொடர்ந்து கோயில் பணிகளில் ஈடுபடுத்தாமல், அதற்கு முழு ஓய்வு வழங்கி, கோவையில் உள்ள அரசு யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் காரசார வாதம்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு, அரசுத் தரப்பு மற்றும் இடையீட்டு மனுதாரர் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மனுதாரர் தரப்பு வாதம்யானைக்கு ஓய்வு வழங்கப்படாவிட்டால், அது விலங்குகளை வதை செய்வதற்குச் சமம் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், "தலைமை வனப் பாதுகாவலர் நியமித்த மருத்துவக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, யானை மிகவும் மோசமான சூழலில் பராமரிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. யானை தொடர்ந்து கடினமான கான்கிரீட் தரையிலேயே நிற்க வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யானை குளிப்பதற்கான குளமோ அல்லது தண்ணீர் தொட்டியோ போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
அரசுத் தரப்பு விளக்கம்மனுதாரரின் குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், "கோயில் யானை அபயாம்பிகை மிகவும் நல்ல முறையில், அனைத்து விதிகளின்படியும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான சத்தான உணவுகளும், மருத்துவ உதவிகளும் தடையின்றி வழங்கப்படுகின்றன. யானையின் உடலில் எந்தவிதமான காயங்களோ அல்லது பாதிப்புகளோ இல்லை. அது ஆரோக்கியமாகவே உள்ளது" யானை குளிக்க தனியாக குளம், ஷவர்களும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
விலங்குகள் நல ஆர்வலர் எதிர்ப்பு
இதே வழக்கில் இடையீட்டு மனுதாரராகத் தங்களை இணைத்துக் கொண்ட விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், யானையை இடமாற்றம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சூழலில் வாழ்ந்து பழகிவிட்ட ஒரு வயதான யானையை, திடீரென அதன் வாழ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றுவது அதன் மனநிலையை பாதிக்கும். இந்த வயதில் செய்யப்படும் இடமாற்றம் அந்த யானையின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்" என்று எச்சரித்தார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது. 60 வயதை எட்டும் கோயில் யானைகளின் ஓய்வு குறித்தும், அவற்றின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்தும் நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இந்தத் தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள பிற கோயில் யானைகளின் எதிர்காலப் பராமரிப்பு விவகாரங்களிலும் மிக முக்கிய வழிகாட்டியாக அமையும் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
