1995-ம் ஆண்டு கட்டப்பட்ட சீர்காழி பேருந்து நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலைய சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பணிகள் தடுத்து நிறுத்தம்
இந்நிலையில் உணவக கட்டிடம், மிதிவண்டி நிறுத்தம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களாக சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல் கட்டமாக ஒரு பகுதி தரை தளம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தரமற்றதாக இருப்பதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழி நகர மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், பாலமுருகன், மற்றும் இவரது ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து நிலையம் சீரமைப்பு குறித்த திட்ட மதிப்பீட்டை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரியும், வேலைகளை தருமாக செய்யக்கோரியும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிகளை தடுத்து நிறுத்திய நகர்மன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பணிகளை தரமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இரண்டாவது முறையாக பணிகள் தடுத்து நிறுத்தம்
நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த செயலால் சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் பின்னர் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பெயர்த்து எடுக்கப்பட்ட சாலையில் உள்ள கருங்கற்களை கான்கிரீட் தடுப்பு கட்டை பணிக்கு பயன்படுத்துவதாகவும், நடைபெறும் பணியின் மதிப்பீடு மற்றும் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது பற்றிய விவர அறிவிப்பு பலகை எதும் வைக்கப்படவில்லை, அது குறித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கேட்ட போது அவர்களுக்கு விவரங்கள் தரப்படவில்லை என குற்றம் சாட்டி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர்கள் திடீரென பேருந்து நிலைய மேம்பாட்டு பணி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்து. அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்தி ஊழியர்கள், மேற்பார்வையாளரிடம் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், பணியின் விவரங்களை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் தற்காலிகமாக பேருந்து நிலைய மேம்படுத்தும்பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதனை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகர் மன்ற உறுப்பினர்கள் பணியை தடுத்து நிறுத்திய நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் பணி நடைபெறும் நிலையில் தொடர்ந்து அந்த பணியினை இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விரைவாகவும் தரமாகவும் பணிகளை முடித்து பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.