சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் பெரிய தெருவை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மகன் 22 வயதான மணிகண்டன். சரக்கு வேன் ஓட்டுநர். இவரும் இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நீலமேகம் மகன் 19 ஜெயசீலன். இவர் பூம்புகார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நண்பர்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் கதிராமங்கத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை மணிகண்டன் ஓட்டிச் செல்ல, ஜெயசீலன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் மயிலாடுதுறையில் சாலை கடக்க முயன்றுள்ளனர். அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஆளவெளியை சேர்ந்த 30 வயதான புருஷோத்தமன் என்பவரும் வந்துள்ளார்.
மோதிய பேருந்து
அப்போது சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இரண்டு இருசக்கர வாகனம் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதில் மூன்று பேரும் இருசக்கர வாகனத்துடன் சாலையில் தடுமாறி விழுந்துள்ளனர். இவ்விபத்தில் மணிகண்டன், ஜெயசீலன் புருஷோத்தமன் ஆகிய மூன்றும் பேர் மீதும் பேருந்து ஏறி இறங்கியுள்ளது. இதில் மூவரும் உடல் நசுங்கி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கப்பல் போக்குவரத்து கன்டெய்னர் விலையேற்றம் - நிரந்தர தீர்வு காண ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கை
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை
இதனை அடுத்து தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் ராமன் மற்றும் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறையினர் உயிரிழந்த மூவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினார். மேலும் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயிலாடுதுறை சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்திய அகலப்படுத்தப்பட்டு அதிக வளைவுகளை கொண்ட சாலையினை சரி செய்து வளைவுகளை குறைத்து சாலையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால் இதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் சரியான வேகத்தடை பேரிகாடுகள் போன்ற எவ்விதமான நடவடிக்கைகளும் முறையாக ஏற்படுத்தவில்லை, இதனால் பெரும்பாலான வாகனங்கள் அளவு கடந்த வேகத்தில் சாலையில் சென்று விபத்துகளை ஏற்படுத்தி பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆகையால் மேலும் விபத்துகள் நடைபெறாத வண்ணம் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.