கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக எழுந்துள்ள கப்பல் போக்குவரத்து கன்டெய்னர் விலையேற்றத்திற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.


 




கரூர் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக ஜவுளி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்நிறுவனங்கள் மூலமாக கையுறை, கிச்சன் டவல், திரைச்சீலை, தலையணை உறை தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது.


 


 




கரூரிலிருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம், ஏற்றுமதிக்கான ஜவுளி பொருட்கள் துாத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, சரக்கு அனுப்ப கன்டெய்னர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 


 


 




இதுகுறித்து கரூர் ஜவுளி நிறுவன உற்பத்தியாளர் ஸ்டீபன்பாபு கூறியதாவது: துாத்துக்குடியில் இறக்குமதி சரக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஏற்றுமதிக்கான கன்டெய்னர் கிடைப்பதில்லை. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக செங்கடலை சுற்றி கப்பல் செல்கிறது. 40 அடி நீள கன்டெய்னரில் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல 1,000 டாலரில் இருந்து 5,000 டாலராக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


 




கடந்த ஒரு மாதமாக, சரக்கு எடுத்து செல்ல கன்டெய்னர் தட்டுப்பாட்டால் சரக்குகளை உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மேலும் கடந்த மூன்று மாதகாலமாக கட்டணத்தை உயர்த்தும் நோக்கோடு கன்டெய்னர் நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து தூத்துக்குடி துறைமுகத்தில் வருகின்ற 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


 


 




பஞ்சு, நுால் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி என ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சவாலாக கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் அதையொட்டிய விலை ஏற்றம் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்க, நிரந்தர தீர்வை ஏற்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கூறினார்.