சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை இல்லாததால் மழையில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வரும் மக்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து உடலை தகனம் செய்யும் அவலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வருகிறது.
மயான கொட்டகை இன்றி அவதியடையும் மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன நிம்மேலி கிராமம் அமைந்துள்ளது. ஏழை எளிய விவசாயி கூலி தொழிலாளிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தகனம் செய்து வருகின்றனர்.
மழையால் மேலும் இன்னல்
அதுவும் மழை காலங்களில் மழை காரணமாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுகுறித்து கூறி தங்களுக்கு மயான கொட்டகை அமைத்துதர வேண்டும் என சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அது குறித்து செவி சாய்சாய்க்காத அதிகாரிகள் இதுநாள் வரை அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
தற்காலிக கீற்று கொட்டகை
இந்த சூழலில் சின்ன நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சந்திரகாசு என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லாததால், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வசூல் செய்து அவர்களது சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து, அதில் உயிரிழந்த சந்திரகாசு உடலை தகனம் செய்துள்ளனர். மேலும் இறந்தவரின் இறுதி சடங்கையும் அதிலே செய்துள்ளனர்.
அரசிற்கு இது ஒரு பொருட்டல்ல
இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து சின்ன நிம்மேலி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்களை அனுபவித்துவிட்டு கடைசியில் அவனின் பூதவுடல் ஆனது உறவினர்கள் நண்பர்கள் மரியாதை செலுத்த அமைதியான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் இறந்த பிறகும் அவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய இன்னல்கள் ஏற்பட்டால், இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் எந்த அளவிற்கு மன வேதனை அடைவார்கள் என்பதை அதனை அருகில் இருந்து காண்பவர்களாக உணர முடியும். ஆகையால் இது போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தாமல், பல்லாயிரம் கோடி திட்டங்களை காட்டிலும், இது போன்ற சிறு மயான கொட்டைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது அரசிற்கு ஒரு பெரும் நிதி சுமை கிடையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.