மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உறவினர்களுடன் சுற்றுலா வந்த இளைஞர் மற்றும் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் 23 வயதான நவீன் குமார். இவருக்கும் செக்கடி தெருவை சேர்ந்த குமார் என்பவரின் 19 வயதான மகள் நிவேதா என்பவருக்கு நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கரூரில் சோகம்
இதனை அடுத்து நிச்சயத்திற்கு வந்த நவீன்குமாரின் உறவினர்கள் மற்றும் திருமணம் நவீன்குமார் உட்பட்ட 25 பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு நேற்று வேனில் சுற்றுலா வந்துள்ளனர். தொடர்ந்து கடலில் குளித்த போது திருமணம் நிச்சயிக்கப்பட்ட நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயண தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 12 வயது மகன் சரவணன் ஆகிய மூவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைக் கண்டு உறவினர்கள் கூச்சல் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அலையில் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நவீன்குமார் மற்றும் சிறுவன் சரவணன் இருவரும் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து உயிருக்கு போராடிய நிவேதாவை போலீசார் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர்களின் உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிச்சயம் நடந்த கையோடு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி திருமணம் செய்ய உள்ள இளைஞர் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.