ஒருமாத காலமாக நீடிக்கும் குடிநீர் பிரச்சினை 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வடகால், நடுத்தெரு, முருகன் கோயில் தெரு, மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீரானது கடந்த ஒரு மாத காலங்களாக சரியான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் காவி நிறமாக வருவதாகவும், இதனால் சமைப்பதற்கு கூட முடியாமல் தவித்து வருவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். 




திடீர் சாலைமறியல் 


இந்த சூழலில் அதனை அதிகாரிகள் நிவர்த்தி செய்யாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனிடையே ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று சீர்காழி - திருமுல்லைவாசல் இடையே வடகால் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி - திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 




உத்தரவாதம் அளித்த அதிகாரிகள் 


தொடர்ந்து அதிகாரி யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது அதிகாரிகள் வந்து எங்களிடம் உத்திரவாதம் அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என சாலைமறியல் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சந்தானம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்டும் என உறுதி அளித்தார். அதனை அடுத்து சாலைமறியல் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.