கடந்த 2- ம் தேதி தென்பட்ட சிறுத்தை 


மயிலாடுதுறையில் கடந்த 02.04.2024 அன்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கின்றனர். இருந்தபோதிலும் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிப்பது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது.


அரியலூர் மாவட்டத்தில் தென்பட்ட சிறுத்தை 


இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 22 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றி திரிந்த சிறுத்தையானது, ஏப்ரல் 7ம் தேதிக்கு பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக சிறுத்தையை தேடுதல் வேட்டையை திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதிகப்படுத்தினர். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் தேடுதல் பணியில் தீவிரப்படுத்தினர். ஆனால் அங்கும் சிறுத்தை குறித்து தொடர் தகவலும் கிடைக்கவில்லை.




 தஞ்சையில் சிறுத்தை 


மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தென்பட்ட சிறுத்தையானது தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புகுந்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் சிறுத்தையை பிடிக்கும் பணிகளில் அங்கு வனத்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகர்ப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைப்புலி, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகிறது. தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் சிறுத்தையின் நடமாட்டம் தெரிந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உடப்பாங்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன் என்பவர் தனது நிலத்தில் சிறுத்தை நடமாடியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். சிறுத்தையை கண்ட ஐயப்பன் உடனடியாக தென்னை மரத்தின் மீது ஏறி தான் தப்பித்ததாகவும், வயலில் இருந்து சிறுத்தை சென்றபிறகு அதுகுறித்து ஊர்மக்களிடம் கூறியதாக விவசாயி ஐயப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 




அதனைத் தொடர்ந்து புளியம்பாடி, கூனஞ்சேரி, உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தண்டோரா மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு இடம்பெயர்ந்ததாக தஞ்சை மாவட்ட வனத்துறை சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது தஞ்சை மாவட்ட வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சிறுத்தை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் பணி


இந்நிலையில் சிறுத்தை குறித்து ஆதார பூர்வமான தகவல்கள் ஏதும் கடந்த சில தினங்களாக கிடைக்காத நிலையில் சிறுத்தையை தேடும் பணியை தற்போது அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் வரை வனத்துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர். மேலும் சிறுத்தை குறித்து அதன் கால்தடம், எச்சம் என எதுவும் கிடைக்காத நிலையில் அது வனப்பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.




சிறுத்தையை பிடிப்பதில் உள்ள சிரமம்.


வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர் கதையாக இருந்தாலும், அவற்றை பெரும்பாலும் விரைவாக பிடிப்பது அல்லது அவற்றை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டுவதும் நடைபெறும். ஆனால் தற்போது ஊருக்குள் நடமாடும் சிறுத்தை வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளை கடந்து, சமதள நில பரப்பான இடத்தில் சுற்றி திரிவதால் அதனை பிடிப்பது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே சுமார் 16 நாட்களை கடந்தும் சிறுத்தையை பிடிப்பது என்பது முடியாத நிலை இருந்து வருகிறது.