நாடு சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரே இந்தியாவின் விண்வெளி கனவு மெல்லமெல்ல நனவுக்கு வரத் தொடங்கியது. 1962 -ல் அப்போதைய பிரதமர் நேருவின் வழிகாட்டுதலின்படி (INCOSPAR) எனும் விண்வெளி ஆராய்ச்சி குழுவை டாக்டர் விக்ரம் சாராபாய் உருவாக்கினார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமும் ஓர் உறுப்பினர். அதனைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)’ என அது பெயர் மாற்றப்பட்டது.




அமெரிக்காவும், ரஷ்யாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய காலகட்டத்தில்தான், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ விண்வெளி அறிவியலில் தளிர்நடை போடத் தொடங்கியது. அந்த அமைப்பு 1975 ஏப்ரல் 19 அன்று முதன்முதலாக வடிவமைத்த "ஆரியப்பட்டா" செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தின் இண்டர்காஸ்மோஸ் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விண்வெளித் துறையில் இஸ்ரோ நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை. 114 விண்கல செலுத்து முயற்சிகள், 84 ஏவுகல செலுத்து முயற்சிகள், 13 மாணவர் செயற்கைக்கோள்கள், 2 மறுநுழைவுப் பணிகள், 34 நாடுகளின் 342 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட பல விண்வெளித் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.




புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை ஆய்வுகள், விவசாயம் ஆகியவற்றுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்கள் பெரிதும் வலுசேர்த்து வருகின்றன. நீர் பாதுகாப்புக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் இஸ்ரோவின் தரவுகள் பேருதவியாக இருக்கின்றன. குறைந்த செலவில் இஸ்ரோவால் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயானும், செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யானும் இன்று விண்வெளி அறிவியலில் இந்தியாவை அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உயர்த்திஉள்ளன. இன்றைய தேதியில், விண்வெளி அறிவியலிலும் விண்வெளித் தொழில்நுட்பத்திலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.




இந்த பெரும் விண்வெளி சாதனையில், மேலும் மெருகேற்றும் விதமாக சீர்காழி தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக ராக்கெட் லாஞ்சிங், பல லட்ச கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கோள்களை காணும் வகையில் தொலைநோக்கி உருவாக்கும், சேட்டிலைட் சிக்னலை பள்ளியில் இருந்து ட்ராக்கிங் செய்தனர்.




தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களே உருவாக்கிய சிறியதாக சாட்டிலைட்டை பள்ளியிலிருந்து விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட இந்த சிறிய ரக சாட்டிலைட்டினை பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு ஹீலீயம் பலூன் உதவியுடன் அனுப்பி அங்குள்ள தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து தகவலை அனுப்பும் வகையில் இதனை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியும், சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகளும் ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசனுடன் இணைந்து உருவாக்கி முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் மேற்பார்வையில் அனுப்பியுள்ளனர்.




இந்த செயற்கைக்கோளானது தொடர்ந்து 3 முதல் 8 மணி நேரம் தனது பயணத்தை விண்ணில் செய்து தகவல்களை திட்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் இருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் இருந்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை அப்பகுதி மக்கள் மட்டும் இன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.