சீர்காழி அருகே 30 கிராமங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் மின் மோட்டார் மற்றும் வயர்கள் திருட்டு போய் உள்ள நிலையில் இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தூர்வாரப்படாத சி, டி வாய்க்கால்கள்
காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி தாலுக்காவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் காவிரி நீர் ஆனது இப்பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கு பயன்பட்டது இல்லை. காரணம் பல இடங்களில் முறையாக தூர்வாராததும், ஏ, பி வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி சி, டி வாய்க்கால்கள் எப்போதும் தூர்வாரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது.
நிலத்தடி நீரை கொண்டு விவசாயம்
ஆகையால் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு அதிக அளவில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அதற்காக அதிகளவில் மின் மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரை கொண்டு சிலர் முப்போகம் விவசாயம் மேற்கொள்கின்றனர். அதற்காக தடையில்லா முன்முனை மின்சாரம் வேண்டி கடந்த காலங்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தற்போது 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் பெற்று சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கி உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விவசாயத்தில் முன்புறமாக ஈடுபட்டு, சம்பா, தாளடி சாகுபடி, குறுவை சாகுபடி மற்றும் கோடைகால சாகுபடியான பருத்தி, எள்ளு, உளுந்து- பயிறு தர்பூசணி என அனைத்து வகையான பயிர்களையும் உற்பத்தி செய்துள்ளனர்.
மின் மோட்டார்கள் திருட்டு
இந்தநிலையில் சீர்காழி சுற்றுவட்டார பகுதியான கொண்டல், தேனூர், வள்ளுவக்குடி, எலத்தூர், குன்னம், கொள்ளிடம், அகனி, நிம்மேலி உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் டிரான்ஸ்பரங்களை நிறுத்திவிட்டு அதில் உள்ள விலையுயர்ந்த காப்பர் காயல்களை திருடுவதும், விளை நிலங்களில் உள்ள நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் அதன் வயர்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி வருகின்றனர். கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் இப்பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார்கள், காப்பர் கம்பிகள் திருட்டு போய் உள்ளது. மேலும் இது தொடர்பாக பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இதுநாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், இதனால் தற்போது குறுவை சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
தற்போது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் செய்வதறியாது வேதனை அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 500 -க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மற்றும் வயர்கள் திருடப்பட்டுள்ளது என்றும், உடனடியாக தமிழக அரசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக தனிப்படை அமைத்து விரைந்து இரவில் திருடும், திருட்டு கும்பலை பிடித்து தங்களிடம் திருடு போன மோட்டார்கள் மற்றும் வயர்களை மீட்டு, தொடர்ந்து தங்கள் விவசாயம் செய்ய வழிவகை செய்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.