துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடரும் சுடுகாடு சாலை பிரச்சினைகள்
பொதுவாக சாலை பிரச்சனை தமிழக முழுவதும் பல பகுதிகளில் அதுவும் கிராமப்புறங்களில் தீர்க்க முடியாத பிரச்சனையாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மயானத்திற்கு செல்லும் பாதை இல்லை எனக் கூறி இறந்தவர்களின் உடலுடன் போராட்டம் செய்யும் சம்பவங்களும் அவ்வபோது தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. ஆனால் அதற்கான முழுமையான தீர்வு என்பதை இன்றளவும் அரசால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நன்குவழிச் சாலை எட்டு வழி சாலை என சாலை விரிவாக்க பணிகளுக்காக பல லட்சம் ஏக்கரில் விலை நிலங்கள் குடியிருப்புகள் என கையகப்படுத்தி சாலை அமைக்கும் அரசுக்கு, சாமானிய மக்களுக்கான மயானங்களுக்கு சாலை என்பது இன்றளவும் சாத்தியம் அற்றதாகவே இருந்து வருகிறது.
திருவெண்காடில் சுடுகாடு சாலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பர் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே அவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
பொதுமக்களின் குற்றச்சாட்டு
மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான செல்லும் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை பதிவு செய்யும் கிராமவாசிகள், இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை வாயல் வழியே வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு அற்ற முறையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி ஏறும் போது வழுக்கி விழுந்து நிலை ஏற்பட்டது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
இதேபோல் இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அடக்கம் செய்வது வருவதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால், மழைக்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசம இருக்கும் என்றும் எனவே இனிவரும் காலங்களிலாவது அரசு மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர்
மேலும் இந்த ஊர் தமிழக முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊராகும், அது மட்டும் இன்றி அவரும், முதல்வர் , விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் அவ்வபோது இங்கு வந்து செல்லும் நிலையில் இந்த ஊருக்கே இந்த நிலைமையா? என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.