தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும் ஏமாற்றம் இருக்காது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ரொம்ப நாளாகவே அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பேச்சுக்கள் நிலவி வருகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என பதிலளித்தார். 


மேலும், “கொளத்தூர் எனது சொந்த தொகுதி. நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அமெரிக்க முதலீடுகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை வெள்ளை அறிக்கை தான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என்பது நன்றாகவே தெரியும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார். 


முன்னதாக, நீண்ட நாட்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக போகிறார் என்ற பேச்சு தான் தமிழ்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் அமைச்சர்கள் பலரும் விதை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் நிச்சயமாக உறுதுணையாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வரும் உதயநிதி துணை முதல்வர் ஆவார் என்ற பேச்சு நிலவியது. 


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதுமே உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு பின்பே அமைச்சரவையில் இடம் கிடைத்தது. விளையாட்டுத்துறை அமைச்சரானார். அப்போதிலிருந்தே நல்ல ஆக்டிவாக அனைவரும் விரும்பக்கூடிய அமைச்சராகவே வலம் வருகிறார். அமைச்சர்களே விரும்பக்கூடிய அளவில் தான் அனைவருடனும் கைகோர்த்து மக்கள் பணி ஆற்றி வருகிறார். இதைத்தொடர்ந்துதான் துணை முதல்வர் பதவி பக்கம் அவரின் பெயர் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.