மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கபட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.


சட்டநாதபுரம் ஊராட்சியில் ஆய்வு


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கடந்த 2023 -ம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதால் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டதாக கூறி சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நடவடிக்கை எடுத்தார்.




பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு 


இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி அனுப்பிய உத்தரவு கடிதத்தில் 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து, சட்டநாதபுரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 




அரசு இதழில் வெளியீடு 


இந்த அறிக்கை 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசு இதழில் கடந்த 09.10.2024 அன்று வெளியானதை அடுத்து சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி நீக்க ஆணையை தெட்சிணாமூர்த்தியிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கினார்.




மீண்டும் பதவி


அதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து தட்சிணாமூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்ஷிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கினார். 




சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீண்டும் பதவி பிரமாணம் செய்து தலைவர் பதவியை பெற்றதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, சட்டநாதபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். வரும் 5-ம் தேதி நாளை தமிழகத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் மீண்டும் பதவி ஏற்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.