தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் சுற்றுப்பயணமாக இன்று வருகை புரிந்தார். அவரது வருகையால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சோதியகுடியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில், திரளானோர் திரண்டிருந்தனர்.

திமுக கொடியேற்று விழாவில் உணர்ச்சிமிகு தருணம்

சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் இயங்காததால், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர். இது திமுக தொண்டர்களின் கட்சிப் பற்றையும், முதலமைச்சர் மீதான அவர்களது பற்றுதலையும் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வு கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலியைப் பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சிவ.வி.மெய்யநாதன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சருக்கு வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு ஷோ

பின்னர், முதலமைச்சர் சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் வழியில் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். மாலை செம்பதனிருப்பு பகுதியில் மேலும் ஒரு கலைஞர் சிலையைத் திறந்து வைத்து முதலமைச்சர், மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலைக் காட்சியில் (ரோட் ஷோ) கலந்துகொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் மக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டார்.

நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நாளை, ஏவிசி கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைப்பார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மயிலாடுதுறை சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவம்

முதலமைச்சரின் இந்த இருநாள் சுற்றுப்பயணம், மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதன் மூலமும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் மூலமும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் நேரடி மக்கள் சந்திப்புகள், அரசின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என திமுகவினர்  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்து, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.