மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்புநீராக வருவதாகக் கூறி, நல்ல குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திடீரென நெஞ்சுவலி நாடகம் நடத்தி, அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியது.

Continues below advertisement

உப்புநீரால் அவதி

புங்கனூர் கிராமத்தில் பல மாதங்களாகவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக, குறிப்பாக உப்புநீராக வருவதால், குடிநீருக்காக மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தரமான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, புங்கனூர் வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஒன்றியச் செயலாளர் கமல்நாத் மணிவேல் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Continues below advertisement

பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரி

ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து தகவல் அறிந்த சீர்காழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) சரவணன், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள், "பலமுறை கோரிக்கை விடுத்தும் ஏன் இதுவரை நல்ல குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை?" என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர். அதிகாரியின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப் போக்கு குறித்துப் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

திடீர் 'நெஞ்சுவலி' நாடகம்!

பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், எதிர்பாராத விதமாகச் செயல்பட்டார். திடீரென அவர் தனது நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாலையில் சரிந்தார். மேலும், தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி கூச்சலிட்டார். இதைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸை அழைக்கத் தொடங்கினர். ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்துகொண்டிருந்த சிலர், அதிகாரியின் இந்தச் செயலையும் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

வீடியோ எடுக்கப்படுவதைக் கண்டு சுதாரிப்பு

ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், பொதுமக்கள் தன்னை வீடியோ எடுப்பதைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், திடீரென சுதாகரித்துக் கொண்டார். தனது நாடகத்தின் உண்மைத்தன்மை அம்பலமாவதை உணர்ந்து, ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், "தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்குச் செல்வதாக" தெரிவித்தார். உடனடியாக அவர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்குடன் பேச்சுவார்த்தைக்கு வந்த ஓர் அரசு அதிகாரி, மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், போலியாக நெஞ்சுவலிப்பதாகக் கூறிச் சாலையில் விழுந்து கூச்சலிட்டதும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், அவரது இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே நகைப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது. ஓர் அதிகாரி, அடிப்படைப் பொதுப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கப் போலியான நாடகத்தை அரங்கேற்றியது கண்டனத்துக்குரியது எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, புங்கனூர் கிராம மக்களின் நீண்ட நாள் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும், மேலும் நெஞ்சு வலி நாடகம் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.