மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜனவரி 2-ம் தேதி ஏலம் விடப்படவுள்ளது என மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. செய்தி குறிப்பு
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 68 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினரிடம் உள்ளது.
ஜனவரி 2-ம் தேதி ஏலம்
இந்த வாகனங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில் வருகின்ற ஜனவரி 2-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஏலம் இடப்பட உள்ளது. ஆகையால் இந்த வாகனங்கள் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில், தொடர்புடைய காவல் அலுவலரிடம் நுழைவு சீட்டு பெற்று பார்வையிடலாம்.
18 சதவீதம் ஜிஎஸ்டி
மேலும், வாகனங்களின் ஏலம் குறித்த அனைத்து விவரங்களையும் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் வாகனத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அரசு நிர்ணயித்துள்ள தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை செலுத்தி பெற்றுக்கொள்ளாம். மற்றவர்கள், பொது ஏலத்தின் போது ஏலத்தில் நிர்ணயம் செய்யப்படும் தொகைக்கு வானங்களை ஏலம் எடுப்பவர்கள் அதற்குண்டான தொகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியினையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
முன்பணம்
ஏலம் கேட்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு 1,000 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 5000 ரூபாய் முன்பணமாக டிசம்பர் 2-ம் தேதி காலை 9 மணிக்குள், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை முழுவதும் உடனடியாக செலுத்தி, அன்றைய தினமே வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் பற்றிய மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள - 9442346507 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.