மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ மாணவிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் இயங்கி வரும் ஏ.ஆர்.சி விஸ்வநாதன் தனியார் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுதும் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் பங்கேற்கும் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று போட்டிகள் 

இதில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு குத்துச்சண்டை, வளையப்பந்து, சிலம்பம் ஆகிய மூன்று விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் நடத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை சித்தர்காடு, ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கலைக்கல்லூரியில் குத்துச்சண்டை போட்டியும், செம்பனார்கோயில் கலைமகள் கலைக்கல்லூரியில் சிலம்பம் மற்றும் வளையப்பந்து போட்டிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

4 Days Work Week in 200 Companies: வாரத்தில் 4 நாட்கள் மட்டும்தான் வேலை... அமல்படுத்திய 200 நிறுவனங்கள்.. எந்த நாட்டில் தெரியுமா.?

6000 ஆயிரம் போட்டியாளர்கள் 

இப்போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 6000 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளனர். இப்போட்டிகளில் 15 தலைமையாசிரியர்களும், 160 உடற்கல்வி இயக்குநர்களும் ஆசிரியர்களும், 10 குழுக்களாக பிரித்து பணியாற்றி வருகின்றனர். 150 நடுவர்கள் நடுவர் பணியாற்றி வருகின்றனர். போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்களைகளுக்கு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழக அரசு முன்னுரிமை வழங்குகிறது. இப்போட்டிகளில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், வெண்கலப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

அடிப்படை வசதிகள் இன்றி அவதி

இந்த சூழலில் கழிவறை, குடிநீர், தங்குமிடம், சுற்றுசூழல் தூய்மை என எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ள வீரர் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் குப்பை மேடுகளுக்கு அருகே அமர்ந்தும், படுத்தும் ஓய்வெடுத்து வருகின்றனர். சுகாதார முற்றிலும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 2100 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ள அரசு நடத்தும் மாநில அளவிலான போட்டியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆட்சியரிடம் புகார் 

இந்நிலையில் போட்டியினை துவங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வந்தபோது, அங்கு சுகாதாரமற்ற சூழல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து போட்டி ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, இந்நிகழ்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்ற மனநிலைக்கு ஆளக்கி விட்டதாக கடுமையாக கடிந்துக்கொண்டார். தொடர்ந்து போட்டியினை துவங்கி வைத்து சென்ற மாவட்ட ஆட்சியரிடம் போட்டியாளர்கள் பலர் சூழ்ந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளித்தனர். அதனைத் மாவட்ட ஆட்சியர் அனைத்து வசதிகளை சரியான முறையில் ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.