மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, மின்சாரத்தை துண்டித்து மாஸ்க் அணிந்து வந்த மூன்று நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் குற்ற சம்பவங்கள்:
தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர். அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் திருட்டு நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் கோயில் உண்டியலை உடைத்து 2 லட்சம் ரூபாய் திருட முயன்று மூன்று கொள்ளையர்கள் சிக்கிய நிலையில், மீண்டும் நேற்றிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தில் இயங்கி வரும் வங்கி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலச்சாலை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணன் பெருமாள்கோவில், கீழச்சாலை, காத்திருப்பு, நாங்கூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கி கணக்கு வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வங்கியானது ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. வங்கி கட்டிடத்திலே வங்கியின் ஏடிஎம் இயந்திரமும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலால் திருட்டு கும்பலுக்கு திருடுவதுக்கு ஏதுவாக இருக்கக்கூடிய ஒரு வங்கியாக இருந்து வருகிறது. மேலும் வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரம் என இரண்டிற்கும் என்று காவலாளியும் கிடையாது.
நள்ளிரவு உடைக்கப்பட்ட ஏடிஎம்
இந்நிலையில் இந்த வங்கியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மாஸ்க் அணிந்து ஏடிஎம் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்தெறிந்து, ஏடிஎம் மிஷினை உடைத்து அதில் இருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். அபாய அலாரம் அடித்தும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் பயணற்று போயியுள்ளது.
மிஷினில் உள்ள லட்ச கணக்கான பணத்தில் எவ்வளவு திருட்டு போனது என வங்கி நிர்வாக கணிணியை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் மேலச்சாலை சுற்றுப்புற கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
காவல்துறையினர் விசாரணை
இந்த வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.