காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம் - டார்ச் லைட் வெளிச்சத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை...!
மயிலாடுதுறையில் காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்த விவாசாயிக்கு அரசு தலைமை மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்த விவாசாயிக்கு அரசு தலைமை மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவபத்தை தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பன்றி தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்து ஆனந்த தாண்டவபுரம், ஆற்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான கண்ணுசாமி. விவசாய கூலித் தொழிலாளியான இவர் நேற்று மதியம் வயலில் விவசாய பணிகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, அங்கிருந்த வைக்கோல் போரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென கண்ணுசாமி எதிர்பாராத சமயத்தில் பலமாக தாக்கியுள்ளது. இதில், கண்ணுசாமிக்கு முகம், கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

விவசாயி படுகாயம்
இதில் கண்ணுசாமிக்கு 4 பற்கள் விழுந்த நிலையில், மேலும் சில பற்களில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் கண்ணுசாமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கண்ணுச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
டார்ச் லைட் வெளிச்சம் சிகிச்சை
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண்ணுசாமியை மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. (அதிமுக) ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கண்ணுசாமியின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட வந்த செவிலியர் மருத்துவமனையில் போதிய மின்சார வெளிச்சம் இல்லாததால் நோயாளியுடன் வந்த உறவினர்களின் செல்ஃபோனின் டார்ச் லைட் பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. மேலும் தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிய பல்வேறு தரப்பினரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் எம்எல்ஏ கண்டனம்
மேலும் இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; '' மயிலாடுதுறை தாலுக்காவில் ஆனந்ததாண்டவபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலாநல்லூர், மொழையூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் கடந்த ஒரு ஆண்டுகளாக அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க் கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் இப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவை குறைபாடு
மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளது. நோயாளிக்கு தையல் போடுவதற்கு செல்ஃபோன் டார்ச்சை பயன்படுத்தும் அவல நிலை நிலவுகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனியார் மருத்துவமனைக்கு நிகரான கட்டமைப்புகளுடன் விளங்கிய இந்த அரசு மருத்துவமனை தற்போது சீர்கெட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, 45 மருத்துவர்கள் இருந்த நிலையில் தற்போது 23 மருத்துவர்கள் மட்டுமே இங்கு உள்ளனர். இங்கு போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.