மதுரை கொட்டாம்பட்டி அடுத்த உதினிப்பட்டியில் ஐந்திணை இயற்கை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் சார்பில் டெல்லியில் போராட்டத்தில் உயிர் நீத்த 732 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய விவசாயிகள் தின விழாவும் இணைந்து 732 மரக்கன்றுகள் 732 பனை விதை நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு இயற்கை வேளாண்மையை பின்பற்ற முன்வரவேண்டும். இரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
விவசாயிகள் பாரம்பரிய வேளாண் முறைக்கும், இயற்கை விவசாயத்தை பயன்படுத்துவதற்கும் முன்வர வேண்டும் என பிரதமர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அறிவிப்போடு நின்று விடாமல் உடனடியாக தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து இயற்கை விவசாயத்துக்கு தேவையான தொழில் நுட்பங்களையும் இயற்கை உர உற்பத்தியையும் உருவாக்க வேண்டும். அதற்கு தேவையான மானியங்களை வழங்கி விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அறிவித்த மழைக்கால வெள்ளநி வாரணம் இதுவரையிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. தைப் பொங்கல் பரிசு சேர்ந்து நிதி உதவி வழங்க முன்வரவில்லை. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 250 கோடி வழங்கவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு இதுவரையிலும் வெள்ள நிவாரண நிதி மற்றும் மாநிலத்திற்கு திட்டங்களுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்டு கையேந்தி நிற்கிறேன் என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது தமிழ்நாடு விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் ஜனவரி 12 ஆம் தேதி மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு பிரதமர் வருகை தருவதை மனமகிழ்ச்சியோடு கரம் கூப்பி வரவேற்கிறோம். அதே நேரத்தில் உரிய நிதியை விடுவிக்க மறுத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வருவதை ஏற்க மாட்டோம். அதை அடையாளப்படுத்தும் விதமாக கருப்புக்கொடி காட்ட கூட தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறோம்.
மதுரை மாவட்டத்தில் நெல்கொள்முதல் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லாத சூழலில் நெல் கொள்முதலை கூட்டுறவு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தட்டிக் கழிப்பது ஏற்க முடியாது. எனவே உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து தடையின்றி கொள்முதல் செய்வதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மேலும் மூட்டை ஒன்றுக்கு 60 முதல் 100 ரூபாய் இடை தரகர்கள் லஞ்சமாக வாங்குகிறார்கள் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. இதனை தடுத்து நிறுத்த கிராமங்கள்தோறும் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு இதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டெல்லி போராட்டக் குழு உறுப்பினர் பஞ்சாப் ராஜிந்தர் சிங் கோல்டன், ஐந்திணை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் அருண் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!