கடைமடை மாவட்ட வரிசையில் கூட கடைசியாக கட்டம் கட்டப்படும் மாவட்டத்தில் சிவகங்கையும் ஒன்று. தொழில் வளர்ச்சிகள் இல்லாததால் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலை இல்லாமல் வெளியூர்களையும், வெளிநாடுகளையும் நம்பிச் செல்கின்றனர். அதேபோல் தான் விவசாயமும் வானம் பார்த்த பூமியாக இருந்துவருகிறது. அதையும் சவாலாக எடுத்து விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இப்படி பல்வேறு வகையில் பின்தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் சிவகங்கையில் பேருந்து வசதிகள் கூட முறையாக இல்லை.
ஓடும் பேருந்துகள் கூட மலைகளில் ஓடி 'கடமுட’ சந்தம் எழுப்பும் பழைய பேருந்துகள்தான் அதிகளவு இயக்கப்படுகிறது. இதனாலேயே சிவகங்கையில் உள்ள பல கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தங்கள் கிராம பகுதிக்கு பஸ் வந்ததற்கு நெகிழ்ச்சியுற்று, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை அடுத்த வடக்கு மகரந்தை, இலந்தக்கரை, கூத்தக்குடி, தவனிமண்டபம், சோழமுடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதிக்கு மதுரையில் இருந்து சூராணத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பேருந்து இரவு 9 மணிக்குத்தான் அப்பகுதிக்கு வரும்.
மேலும் அதிகாலை 5 மணிக்கு சென்றுவிடும். இதனால், பேருந்துகள் இயக்கப்பட்டும் பயன் இல்லாமல் இருந்தது. இப்பகுதி மக்கள் பகல் நேரத்திலும் பேருந்தை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு பகல் நேரத்தில் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக பேருந்து இயக்கப்பட்டதற்கு வடக்கு மாரந்தை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஓட்டுநர், நடத்துநருக்கு பொன்னாடை போர்த்தி நெகிழ்ச்சியடைய செய்தனர்.
இது குறித்து நம்மிடம் மகரந்தை ஊராட்சி மன்ற தலைவர் திருவாசகம், “எங்கள் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவகங்கையில் காலை 5 மணிக்கு எடுக்கும் இந்த பேருந்து 7:30 மணிக்கு ஆர்.எஸ்.மங்கலம் செல்லும். மீண்டும் ஆர்.எஸ்.மங்கலத்தில் காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டும், பேருந்து 10:30 மணிக்கு சிவகங்கை வந்துவிடும். இது எங்கள் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதம். பேருந்துகள் விட முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.
தங்கள் பகுதிக்கு புதிதாக ஒரு பேருந்து வசதி கிடைத்ததை இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றனர். இதனால் இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிகளவு பயன்பெற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!