சிவகங்கை அருகே விவசாய நிலத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவர்  கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், அவருடன் சென்ற தந்தை, தம்பி இருவரும் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரைச்  சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன்கள் கிரிஸ்டோபர், ஜோசப் ஆகிய  இருவரும் வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில்  மருத்துவர்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். இருதயராஜிக்கு  சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் அண்ணாமலை நகர் பகுதியில் சுடுகாட்டின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இன்று இருதயராஜுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடையாளம்  தெரியாத போதை ஆசாமிகள் 6 நபர்கள், மது அருந்திக் கொண்டும் அங்குள்ள ஓட்டு வீட்டினை அடித்து நொறுக்கி கொண்டிருப்பதாகவும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்ட  இருதயராஜ் மற்றும் அவரது மகன்கள் கிரிஸ்டோபர் மற்றும் ஜோசப் ஆகிய மூவரும் அங்கு சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.



இதில் ஆத்திரமடைந்த அந்த போதை  கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் தந்தை, மகன்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மகன் கிரிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தந்தை இருதயராஜும் மற்றோரு மகன் ஜோசப்பும் படுகாயமடைந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் படுகாயத்துடன் இருந்த தந்தை மகனை மீட்டு சிவகங்கை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் பார்வையிட்டு கொலையாளிகளை பிடிக்க தனிக் குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் சிவகங்கை காவல்துறையினர் கொலை செய்த மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.



மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !

”தங்கள் இடத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்டதற்கு உயிரை எடுத்துள்ளனர் போதை ஆசாமிகள். மருத்துவ மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குற்றவாளிகளை காவல்துறையினர் விரைவாக பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.