108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயில் தென் திருப்பதி, திருமாலிருஞ்சோலை என போற்றப்படுகிறது. பதினெட்டாம்படி கருப்பணசாமி, கள்ளழகர், பழமுதிர்சோலை முருகன் கோயில், ராக்காயியம்மன் கோயில் என ஏராளாமான கோயில்கள் அழகர்கோயிலில் உள்ளது. இதனால் தினம் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இந்நிலையில் ப்ளாஸ்டிக்கு பைகள் மீதான தடையை மீறி வனப்பகுதிகள் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கை வனத்துறை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 





 அழகர் மலைக்கு வாகனங்களில் வருவோர் சாலையோரமுள்ள வனப்பகுதியில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர்.  சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகின்றனர். இதேபோல் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை அங்கேயே விட்டுச்செல்கின்றனர்.  இதுபோன்ற செயல்களால் மது பாட்டில், பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள் என பிளாஸ்டிக் கழிவுகள் அழகர் மலையின் சாலையோர பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது.  இவை சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, இப்பகுதியில் உலாவரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பைகளையே உணவாக சாப்பிடுகின்றன. மேலும் உணவுகளை சாப்பிடுவதற்காக சாலையை கடக்கும் போது விலங்குகள் சில விபத்தில் சிக்குகிறது. 



இந்நிலையில் மதுரை அழகர் கோவில் மலைப்பகுதியில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை காட்டெருமை ஒன்று சாப்பிடும் வீடியோ சுற்றுலா பயணி ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காட்டெருமை ஒன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தூக்கியெறிந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டும் அழகர் மலை சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன.



வனத்துறையினரும் இதை கண்டுகொள்ளாத நிலையில், அரிய வனவிலங்குகள் பல தற்போது அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வனத்தையும்,வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வனத்துறை, பிளாஸ்டிக் கழிவுகள் விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.