ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7  பேருக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 17-ஆம் தேதி கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற ரஹ்மத்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையிலேயே கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த வழக்கு விசாரணைக்கும்,  நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்ஃபீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் உள்ளிட்ட 7 பேரும்  முன்ஜாமின் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்குகள் நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் கோரியவர்கள் இனி மேல் இதுபோன்று அவதூறாக பேச மாட்டோம் என பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று நீதிபதி முரளிசங்கர் 7 பேருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை, திருவாடானையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 5 பேரும்  திருவாடனை காவல் நிலையத்திலும், மதுரை தல்லாகுளத்தில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 2 பேரும் தல்லாகுளம் காவல் நிலையத்திலும் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


 




கோகுல்ராஜ் கொலை வழக்கின் இறுதி விசாரணை 


கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.