உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது., மீறி வெடி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் கல்யாணம், காதுகுத்து, இறப்பு வீடு என எல்லா நிகழ்வும் களைகட்டும். சீர் வரிசைக்கு முன்னாள் போடும் வேட்டு சத்தம் ஊரே அளரும். அந்த அளவிற்கு தங்களது தாட்டியத்தை காண்பிக்க தாய்மாமன்களும், அய்யன் அயித்தைகளும் சிறப்பாக விழாவை முன்னெடுப்பார்கள். இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி வெடி வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மஹாலில் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இல்ல விழாக்களில் வெடி வெடிக்கும் கலாச்சாரத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும், காற்றும் மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மண்டபங்களை புக்கிங் செய்ய வரும் போதே இல்ல விழாக்களை நடத்தும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், மீறி வெடி வெடித்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.,
மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டே நகராட்சி பகுதியில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் அது நடைமுறைபடுத்தாமல் உள்ளதாகவும், இதை தற்போது நடைமுறைப்படுத்தி வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நகர் மன்ற தலைவர் சகுந்தலா வேண்டுகோள் விடுத்தார்.