சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் மூலம் வந்தே பாரத் ரயிலில் புகைப் பிடித்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரமாக முயற்சித்து வருகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும் அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இது தவிர வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயிலில் புகைப் பிடித்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரமாக முயற்சித்து வருகிறது.
புகை பிடித்ததால் இந்த கருவி எச்சரிக்கை
வந்தே பாரத் ரயில்களில் தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் கழிவறைகளில் சிறப்பு புகை நுகர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டி ஒன்றுக்கு இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 22 அன்று நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) திண்டுக்கல் அருகே சென்ற போது உயர் வகுப்பு இருக்கை பெட்டியில் புகை நுகர்வு கருவி எச்சரிக்கை ஒலி ஒலிக்க ஆரம்பித்தது. இதனால் ரயில் வடமதுரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் யாரோ ஒருவர் புகை பிடித்ததால் இந்த கருவி எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது.
புகைப் பிடித்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை
அந்த நேரத்தில் புகைப்பிடித்த பயணியை கண்டுபிடிக்க இயலாததால், ரயில் அங்கிருந்து புறப்பட்டது. புகைப் பிடித்தவரை பிடிக்க தற்போது ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் ரயில் நிலைய வளாகம் ஆகியவற்றில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி புகைப்பிடிப்பவர்கள் ரயில்வே சட்டம் பிரிவுகள் 145 பி மற்றும் 167 ஆகியவற்றின் படி கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வந்தே பாரத் ரயிலில் புகைப் பிடித்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு