இராமேஸ்வரத்தில் இளம் பெண்களை குறிவைத்து, மினி சைஸ் ரகசிய கேமராக்கள் மூலம் சட்ட விரோதமாக வீடியோ பதிவு செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சைபர் குற்றங்கள்
நவீன காலகட்டத்தில், டிஜிட்டல் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்துவிட்டது. ( AI - எ.ஐ) தொழில் நுட்பங்கள் மூலம் பல விசயங்களை செய்யமுடிகிறது. இதனை தவறாகவும் பயன்படுத்த முடிவதனால் டிஜிட்டல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மினி சைஸ் கேமராக்கள் மூலம் பெண்கள் உடைமாற்றும், இடத்தில் வைத்து வீடியோ பதிவு செய்த சம்பவம் இராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தம்
இராமநாதபுரத்தில் அமைந்துள்ள, இராமேஸ்வரம் மிகப்பெரும் முக்கிய புண்ணிய ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியர்களும், வெளிநாட்டுப் பயணிகளும் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஸ் கண்ணா, மீரான் மைதீன் ஆகிய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சம்மந்தப்பட்ட இருவரிடமும் இருந்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “செல்போன், கார் சாவி, பணம், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைக்க லாக்கர் வைத்துள்ளனர். அதனை லாக்கரில் வைத்துவிட்டு குளித்து முடித்த பின் மீண்டும் உடை மாற்ற வரும் நபர்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்து செல்போன் மூலம் பார்த்துள்ளனர். பெண்கள் அறையில் மட்டும் இரு பிரிவாக வைத்துள்ளனர். இதில் இளம் பெண்களை மட்டும் மறைமுக மினி கேமரா இருக்கும் அறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த கேமரா இருப்பது தெரியாத இளம் பெண்கள் எதார்த்தமாக உடை மாற்றிய பின் வெளியே வந்துவிடுகின்றனர்.
சிக்கியது எப்படி?
இப்படி ஒரு இளம் பெண்ணை வீடியோ பதிவு செய்யும் போது, மினி கேமரா இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் சிக்கிக் கொண்டனர். இப்படி கடந்த 2 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களை வீடியோ எடுத்து வந்துள்ளது தெரிவந்துள்ளது. தற்போது மட்டும் அவர்கள் செல்போனில் சட்ட விரோதமான 120 வீடியோக்கள் இருந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தும் விசாரணையில் கூடுதல் விபரங்கள் தெரியவரும். வேறு நபர்களுக்கு வீடியோவை அனுப்பியுள்ளனரா? இணையதளத்தில் பதிவு செய்துள்ளனரா என்று விசாரணை நடக்கிறது.
குற்றங்களை தடுக்க வேண்டும்
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் நம்மிடம் பேசுகையில்..,” தற்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இளம்பெண்களை குறிவைத்து மினி கேமரா மூலம் வீடியோ பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொடர்ந்து இராமேஸ்வரம் பகுதியில் பல காட்டேஷ்கள், ஹோட்டல்கள் உருவாகிவிட்டது. இவை அனைத்து அனுமதி பெற்றதா என்றால் கேள்விக் குறிதான். எனவே அதிகாரிகள் இது போன்ற இடங்களில் மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் இது போன்ற இடத்திற்கு வரும் நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகங்கள் எழுந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்” என்றார்.
- Southern Railway: தாம்பரம் - கொச்சுவேலி ஏ.சி. சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு