வரும் 20ஆம் தேதி முதல் மதுரை - பெங்களூரு  இடையேயான வந்தே பரத் ரயில்வே சோதனை ஓட்டம் மதுரையிலிருந்து தொடங்கியது.

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகிறது.   இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 20-ம் தேதி மதுரை - பெங்களூரு இடையே இயக்கவுள்ள வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

 


 

சோதனை ஓட்டம் நடைபெற்றது


 

தமிழ்நாட்டின் ,தெற்கு மாவட்டங்களை கர்நாடகாவின் ஐ.டி நகருடன் இணைக்கும் வகையில், இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.  இந்தநிலையில் இந்த வந்தே பாரத் ரயிலானது, மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடைகிறது. இடையில் திருச்சியில் 7.15 மணிக்கும், சேலத்தில் 9.55 மணிக்கும் வந்து சேர்கிறது. தலா 10 நிமிடங்கள் மட்டும் நின்று விட்டு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 1.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்பட்டு 5 மணிக்கு சேலம், 8.20 மணிக்கு திருச்சி என இரவு 10.25 மணிக்கு மதுரை ஜங்ஷனை வந்தடைகிறது.

 

இந்நிலையில் இன்று காலை 5:15 மணிக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக தண்டவாளங்கள் சரிபார்க்கப்பட்டு குறிப்பிட்ட வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இன்னும் இரு நாட்களில் வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட உள்ள நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.