நானும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறேன். வெடி, வெடிப்பதை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
பட்டாசு வெடிக்கத் தடை:
மதுரை உசிலம்பட்டி பகுதியில் கல்யாணம், காதுகுத்து, கிடா வெட்டு என்று சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடிப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தங்களது பட்டாசு வெடிப்புச் சத்தம் கேட்டு ஊரே வியக்க வேண்டும் என நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றனர். ஆனால் இந்த செயல் உசிலம்பட்டி பகுதியில் மிகப்பெரும் பிரச்னையாக மாறிவருகிறது.
சாலைகளில் அதிகளவு பட்டாசுகளை வெடித்து சாலை போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பட்டாசு வெடிப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பட்டாசு வெடிப்பதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் உசிலம்பட்டியில் பட்டாசு வெடிப்பாதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க, இல்ல விழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும்., என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டியில் பட்டாசு விபத்து:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில், ரமேஷ் என்பவரது இல்ல விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில், முத்துப்பாண்டி என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உசிலம்பட்டி நகர் பகுதியில் வெடி வெடிப்பதால் ஏற்படும் தொடர் விபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன்,” மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதி தான் உசிலம்பட்டி. இங்குள்ள நகர் சாலைகளில் பட்டாசு, வெடித்தால் சம்பந்தப்பட்ட இல்ல விழா நடைபெறும் மண்டபத்திற்கு சீல் வைக்க வேண்டும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நடைபெற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடுமையான நடவடிக்கை தேவை:
பொதுமக்கள் அதை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பதால், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. அதை உணர்ந்து பொதுமக்கள் தானாக முன் வந்து பட்டாசு வெடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது காவல்துறை, நகராட்சி நிர்வாகம் விழிப்புடன் இருந்து பட்டாசு வெடிப்பதை கண்காணித்து, ஓரிரு திருமண மண்டபங்களையாவது சீல் வைக்க வேண்டும். மேலும், அங்கு அபராத தொகையை வசூல் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
வெறும் ஏட்டளவில் இருந்தால் பட்டாசு வெடிப்பது, தொடர் விபத்துகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து வெடி வெடிப்பதை தடை செய்ய வேண்டிய அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்., நானும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறேன். வெடி, வெடிப்பதை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என பேட்டியளித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Muthu: “உதவி செய்யுங்க நிம்மதி ஏற்பட்டு நல்லா தூக்கம் வரும்”- மதுரை முத்துவின் நெகிழ்ச்சி பேச்சு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Video : ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் : மதுரையில் திருமண விழாவில் சுவாரஸ்யம்