மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் கலந்து கொண்ட 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கலந்துகொண்டதை பெருமை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்கம் 

 

தமிழகத்தில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட தொடங்கிய நிலையில் மதுரை ரயில்வே சந்திப்பு வழியாக நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களுரு ஆகிய 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. முதன் முறையாக மதுரையிலிருந்து பெங்களுருக்கு நேரடி வந்தே பாரத் ரயில் கடந்த சனிக்கிழமை முதல் இயக்கப்பட்டது. மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் ‘வந்தே பாரத்’ தொடக்க விழா மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் வி. சோமன்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர்மோடி காணொலி மூலம் சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் மற்றும் மீரட் - லக்னோ இடையேயான  3 வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கிவைத்த நிலையில், மதுரையிலிருந்து பெங்களுரு செல்லும் வந்தே பாரத் ரயிலை ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கொடியசைத்த நிலையில், ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது  ரயில் புறப்பட்டபோது பூக்கள் தூவி மேளதாளங்கள் முழங்க அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் கலந்து கொண்ட 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கலந்துகொண்டதை பெருமையாக கருதுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

சுதந்திர போராட்ட வீரர்


 

பேரையூர் பகுதியில் இருந்து 101 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகம் பெருமாளும் கலந்து கொண்டது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இவர் 1924 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி. கிருஷ்ணாபுரம்  கிராமத்தில் பிறந்தவர். இவர் 1942 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் எதிரே ஆகஸ்ட் புரட்சியான "வெள்ளையனே வெளியேறு" சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். இதன் காரணமாக இவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அல்லிபுரம்  சிறையில் அடைக்கப்பட்டார்.

 

தமிழ் மீது ஆர்வம்


 

இவர் ஒரு பெரிய தமிழ் ஆர்வலர். சமீபத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த விழாவில் 1330 திருக்குறளையும் ஒரு மணி 40 நிமிடத்தில் ஒப்பித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் திருக்குறளில் நவரசம் என்ற தலைப்பில் 120 பக்கத்தில் ஆய்வு கட்டுரை ஒன்றை மதுரை உலக தமிழ்ச்சங்கம் மூலமாக தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். திருக்குறளில் உள்ள 1300 க்கும் மேற்பட்ட பழம் தமிழ்ச் சொற்களுக்கு பொருள் பதங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.