உசிலம்பட்டியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக சாலையோர கடை வியாபாரிகளிடம் நகராட்சி பெயரில் 50 முதல் 200 வரை வடிவேலு பாணியில் தனிநபர்கள் வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு தற்காலிகமாக சாலையோரத்தில் கடைகள்

 

நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. பூஜை பொருட்கள், வாழை மரங்கள், பொறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தற்காலிகமாக சாலையோரத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்தனர்.

 


 

ரசீது வழங்காமலும் தனிநபர்கள் ரூபாய் 50 முதல் 200 ரூபாய் வரை வசூல் வேட்டை 

 

தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளின் வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வசூல் செய்வதாக கூறி 30 ரூபாய்க்கான ரசீது வழங்கியும், பலரிடம் ரசீது வழங்காமலும் தனிநபர்கள் ரூபாய் 50 முதல் 200 ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

 

வசூல் செய்ய ஒப்பந்தம் ஏதும் விடவில்லை - நகராட்சி தகவல்

 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது....,” வசூல் செய்ய ஒப்பந்தம் ஏதும் விடவில்லை. யார் வசூல் செய்கிறார்கள் ஆய்வு செய்கிறோம், என தெரிவித்தனர். நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்படாத சூழலில் நகராட்சி ஊழியர்கள் மூலம் சாலையோர கடைகளிடம் தினசரி வாடகை வசூல் செய்வது வாடிக்கை. ஆனால் நகராட்சி ஊழியர்கள் அல்லாத தனிநபர்கள் ரசீது வழங்கும் தொகையை விட கூடுதலாக வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.