திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மாற்றான் தாய் மனப்பக்குவத்துடன் நடத்தவில்லை
மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டி.டி.வி தினகரன் கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எப்படி வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும். மத்திய அரசு தமிழக அரசை மாற்றான் தாய் மனப்பக்குவத்துடன் நடத்தவில்லை. புயல், வெள்ள பாதிப்பின்போது மத்தியக்குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் நிதி தமிழகத்திற்கு வந்தது, மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை, தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது.
மறைமுக ஆதாரவு அதிமுக
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் வந்துள்ளது. அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும், எடப்பாடியின் செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அதிமுக இருக்குமா ? என்கிற கேள்வி வருகிறது, 2026ல் வெற்றி பெறுவோம் என பழனிசாமி நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது. 2026ல் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டால் பிற கட்சிகளுக்கு தான் பலமாக அமையும். எடப்பாடியின் 4 ஆண்டு ஆட்சியின் ஊழல் பயத்தால் திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது.
காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்
கோடநாடு கொலை வழக்கு, அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது. அதிமுகவில் என்னுடைய சிலிப்பர் செல்கள் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகயால் முன்னாள் அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும், பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்" எனக் கூறினார்.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ilaiyaraja: இளையராஜா சென்ற கோயிலில் நடந்தது இதுதான்! அறநிலையத்துறை விளக்கம்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? "கிரீன் மேஜிக் ப்ளஸ்' விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!