ஆவின் பால் விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்தும் நோக்கில் கிரீன் மேஜிக் ப்ளஸ் வகையை அறிமுகம் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.


இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், "திராவிட மாடல் ஆட்சியின் கீழ் ஆவின் நிறுவனத்தின் சாதனையாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.



ஆவின் பால் விலை மறைமுகமாக உயர்த்தப்படுகிறதா?


தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.


பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024- 2025இல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது.


அமைச்சர் தந்த விளக்கம்:


மேலும் அனைத்து மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.


மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை குறைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.


இதையும் படிக்க: தொழில் தொடங்க ஆசையா ! மானியத்துடன் கூடிய கடன் ; இளைஞர்களே தவறவிடாதீர்... முழு விவரம் உள்ளே!