உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவிர்த்து வரக்கூடிய சூழல் நிலவுகிறது. பல இடங்களில் தொழிலும், வியாபாரமும் மந்தமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்கும் முயற்சியாக பலரும் வித்தியாசமான யோசனைகள் கையில் எடுத்து வியாபாரத்திற்கு சூடு வைத்துள்ளனர். இதில் மதுரை (Madurai) மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் வேற ரகம் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசத்தை காட்டுகின்றனர்.

 


 

செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய், பலசரக்கு சாமான் இலவசம் என கவர்சிகர விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றனர்.  வருவாய்த்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மூன்று பிரிவு பிரியாணி இலவச ஆபர்களை அளித்து அட்ராசிட்டி செய்தார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர். அதே போல் மதுரை ஒத்தக்கடை பகுதியில் மீன் கடை அறிமுக சலுகையாக ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 



 

இந்த நிலையில், மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள சுப்பிரமணிய பிள்ளை தெருவில், கோவையை சேர்ந்த துணிக்கடையின் கிளை மதுரையில் புதிய துணிக்கடை நேற்று திறக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தள்ளுபடி விலையில் துணி விற்பனை செய்வதில் பெயர் போன இந்த கடையானது 6 ஆம் தேதியான நேற்றைய தினம் திறக்கப்பட்டதால் அன்று ஒருநாள் மட்டும் 6 ரூபாய்க்கு அனைத்து துணிகளும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தனர். இதனால் புதிதாக திறக்கப்பட்ட அந்த கடை முன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 3,000த்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. 



 

கொரோனா நோய் தடுப்பு விதிகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் ஆயிரக்கணக்கான நபர்கள் ஒரே இடத்தில் கூடியதால் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி கடைக்கு அபராதம் விதித்து தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட்டனர். இரண்டாயிரம் நபருக்கு துணிகள் விற்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நபர்களுக்கு துணிகள் இல்லாமல் தீர்ந்து விட்டது என கடை அடைக்கப்பட்ட காரணத்தால் காத்திருந்த மக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.