ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கீழக்கரை சாலையில் ரயில்வே மேம்பாலம்  28 கோடியில் அமைக்கும் பணி கடந்த ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு  அக்டோபரில் தொடங்கப்பட்டது. தற்போதுவரை முடிவடையாமல் உள்ளது. மேலும் பணிகள் எதுவும் நடைபெறாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.


'கீழக்கரை மேம்பால திட்டம்'




ராமநாதபுரம்-கீழக்கரை சாலை  சேதுநகர் ரயில்வே கேட் மூடப்படும்போது பழைய பேருந்து நிலையம்  வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, தூத்துக்குடி  ஆகிய பகுதிகளை சேர்ந்த பொமக்கள் இ.சி.ஆர்.,பாலம் வழியாக 6 கி.மீ., துாரம் வரை சுற்றி வந்து தற்போது வரை சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 28 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு  திட்டமிடப்பட்டது.


இத்திட்டத்திற்காக  30.74 கோடி நிதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நில ஆர்ஜிதத்துக்காக 5.14 கோடியும், பாலம் கட்டுமான பணிகளுக்காக 25.60 கோடியும் ஒதுக்கியது. இச்சாலை மேம்பாலமானது 675.56 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலத்திலும் அமையவுள்ளது. அதேபோல் பாலத்துக்கான அணுகுசாலை இருபுறமும் சேர்த்து 379 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை இரு ஆண்டுகளுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், 2018ஆம் ஆண்டின் இறுதியில் பணிகள்  தொடங்கி தொடர்ந்து ஒன்றரை வருடமாக  துரிதமாக நடைபெற்று வந்தது. இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முடிக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா காலத்தில் இதற்கான பணியானது முற்றிலும் தடைபட்டது. அதனை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் நடந்தும் பணிகள் எதுவும் நடைபெறாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.




மேலும், தற்போது பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் நகரில் இருந்து- ராமேஸ்வரம் சாலையில் நாகர்கோவில், துாத்துக்குடி போன்ற பகுதிகளுக்கும், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களால் ராமேஸ்வரம் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பணி முழுமையடையாமல், அந்த சாலை முழுவதும் தோண்டப்பட்டு கிடப்பதால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சிறிய ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாமல்  சிரமப்படுகின்றன. மேலும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  



இதனால்  வாகன ஓட்டிகளும் அவதி அடைகின்றனர். நாள்தோறும்  சில விபத்துகளும்  நடக்கிறது. 'அமைச்சர் முதல் ஆட்சியர் வரை இந்த சாலையில்தான் அனுதினமும் வாகனத்தில் செல்கிறார்கள்' ஆனால், இந்த மேம்பாலத்திற்கும் சாலை பணிகளுக்கும் முற்றுப்புள்ளியே இல்லையா என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  எனவே, அந்த சாலையில் போக்குவரத்து சிரமத்தை தவிர்க்க, கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை இந்த ஆட்சியாளர்களாவது  ரயில்வே மேம்பால திட்டத்திற்கான  பணிகளை மீண்டும் தொடங்கி, தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.