மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நாடாளும மன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சு.வெங்கடேசன், அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



 

சிறப்புரையில் பேசிய வைகோ..,” ஏழை குடும்பத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக 1991இல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கி இன்று தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் தொல். திருமாவளவன். மாணவ பருவத்தின் போதே ஈழத்தமிழர்களுக்காக மாணவர் அமைப்பை உருவாக்கியவர். மக்கள் நல கூட்டணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். இன்று இந்தியாவில் சனாதன தர்மத்தின் சனாதன சக்திகளின் முதல் எதிரியாக தொல். திருமாவளவன் திகழ்கிறார். நான்கு வருணங்களின் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்த கொடுமைகளை உடைக்க, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற போரிடும் வாளாக திகழ்கிறார். இன்று நாட்டை பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தியா என்ற பெயரை அகண்ட பாரதம் என்று மாற்ற சனாதன சக்திகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைநகர் புதுடெல்லியை வாரனாசிக்கு மாற்றவும், ஒரே மொழி ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதை செயல்படுத்தவும் துடித்து வருகின்றன.

 



ஒரே நாடு ஒரே கலாச்சாரம் எப்போது இருந்தது? குப்தர் ஆட்சியில் மௌரியர் ஆட்சியில் மூவேந்தர்கள் ஆட்சியின் போது கூட இங்கு ஒரே கலாச்சாரம் ஒரே நாடு என்று இருந்தது கிடையாது. இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. எனவே இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று அழைக்க வேண்டும் என்று மக்களவையில் முன்பே வலியுறுத்தியுள்ளேன். ஆனால் சனாதன சக்திகள் இந்தியாவின் தனித்தன்மையை ஒழிக்க திட்டம் தீட்டி வருகின்றனர். ஹிந்தி சமஸ்கிருதத்தை ஆதிக்க மொழியாக நிறுவ முயல்கின்றனர். சனாதன எதிர்ப்புக்கு தமிழகம் தலைமை தாங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திருமணமே செய்து கொள்ளாமல் இயக்கமே குடும்பம், தொண்டர்களே பிள்ளைகள் என்று வாழும் ஒரே தலைவர் தொல் திருமாவளவன் மட்டுமே. காமராஜருக்கு அடுத்தபடியாக மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு யுத்தம் வெல்ல வேண்டும். அனைவரும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும் என்றார்.

 




.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்