கார்பன் நகலில் சிரியல் எண், மாணவரின் கைரேகை ஆகியவை இடம் பெறவில்லை எனவே, இது தொடர்பாக உரிய ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை - மாணவன் தரப்பு

 

திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவன்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "நான் 12 ஆம் வகுப்பு முடித்து  கடந்த ஜூலை 17லில் நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட் தேர்வில் பங்கு பெற்றேன் தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை (answer key) வெளியிட்டது அதில், எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது.

 

இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய OMR விடைத்தாள்  பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது. அதை பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சியானது. அந்த OMR பதில் தாள் என்னுடையது அல்ல அதில், எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே வரும் அந்த OMR விடை தாள் நான் எழுதியது இல்லை எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது. 

 

இதில், ஏதோ குளறுபடி நடந்துள்ளது. எனவே, எனது அசல் OMR விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் மேலும் எனது விடைத்தாள் மோசடி  குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், மருத்துவ கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் நீதிபதி முன்பாக  மாணவரின் OMR மற்றும் கார்பன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இந்த நிலையில் இன்று இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரரின் தரப்பில், கார்பன் நகலில் சிரியல் எண், மாணவரின் கைரேகை ஆகியவை இடம் பெறவில்லை எனவே, இது தொடர்பாக உரிய ஆய்வு செய்ய கால அவகாசம் கோரபட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 








மற்றொரு வழக்கு

 

மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில், குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே இது சம்பந்தமாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மரிய செல்வி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது  தாய் மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக உள்ளார் மக்கள் பேராயர் என அனைத்து மதத்தினராலும் புகழப்பட்டவர்.  இந்த நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் கொடைக்கானலில் பல்கலைக்கழகத்திற்கு அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டர்  என வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

 

இது அவரது மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது எனவே இந்த  வார இதழ், அதில் பணியாற்றும் நிருபர்கள் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே இது சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை குறித்த அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.