மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

” கொரோனா பாதிப்பு என்பது கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 மாதமாக கொரானா தொற்று நூற்றுக்கும் கீழ், 50க்கும் கீழாக இருந்தது. இறப்பு என்பது தற்போது வரை இல்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கொரானா பரவிய நிலையில் தற்போது அது கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் 22 இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் 2,3 என்ற அளவில் கொரானா பரவியுள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்களில் கொரானா வேகமாக பரவி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா மிக வேகமாக பரவி வருகிறது.



தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு குறித்த கேள்விக்கு:

 

மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. இப்படி ஆய்வு செய்யும்போது ஒரு சில இடங்களில் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. ஒரு சில இடங்களில் குறைகள் உள்ளன. இது காலப்போக்கில் சரிசெய்யப்படும். சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. 



விமான நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்த கேள்விக்கு

 

பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு சதவீதம் ரேண்டம் செக்கப் செய்யப்படுகிறது. மதுரையில் நாளொன்றுக்கு 600 பேர் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். இவர்களில் 2% செக்கப் செய்யப்படுகிறது. குரங்கு அம்மை 22 நாடுகளில் பரவியுள்ளது. இருப்பினும் மதுரை போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்நகரில் இருந்து பயணிகள் வராத போதும் டிரான்சிட்டர் முறையில் பயணிகள் வருகிறார்களா என்பதை கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. முகத்தில் கொப்பளம் கை கால்களில் புண் மற்றும் கொப்புளம் இருந்தால் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு என்பது இல்லை. சென்னையில் ஒருவருக்கு முகத்தில் வித்தியாசமான கொப்பளங்கள் இருந்ததால் அது ஆய்வு செய்யப்பட்டது இருப்பினும் அவருக்கு குரங்கம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த கேள்விக்கு

 

தமிழகத்தில் கொரானா கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சூழ்நிலை இல்லை. தமிழகத்தில் தினந்தோறும் 15,000 பேருக்கு மேலாக கொரானா பரிசோதனை எடுக்கப்படும் நிலையில் தற்போது இரண்டு சதவீதம் அளவுக்கு கொரான பாதிப்புகள் உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை.



மதுரை எய்ம்ஸ் தாமதம் குறித்த கேள்விக்கு

 

எய்ம்ஸ்  கட்டுமான பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஒன்றிய அரசின் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். மேலும் மருத்துவத் துறை அமைச்சர் என்ற முறையில் 7,8 முறை நானும் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். அதன் விளைவாக அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். எய்ம்ஸ் இயக்குனரை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் மருத்துவமனையின் டிசைன் தயாராகிக் கொண்டு இருப்பதாக தெரிவித்து கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் மருத்துவமனையின் டிசைன் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசைன் கிடைக்கப் பெற்றதும் அதற்கு அனுமதி பெறப்பட்டு டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும். கடந்த ஆட்சி காலத்தில் இதனை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் தற்போது நாம் அதை துரிதப்படுத்தி உள்ளோம். எப்படியாக இருந்தாலும் இன்னும் ஐந்து ஆறு மாதத்திற்கு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும் என்றார்.