இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது எந்த அளவு உண்மையோ அந்த அளவு நவீன முறையில் திருடும் திருடர்களும் அதிகரித்து உள்ளனர். அதற்கு பல்வேறு உதாரணங்கள் எடுத்துக்கூறலாம். ஆன்லைன் பண  மோசடி, போலி வங்கி கணக்கு மூலம் மோசடி செய்வது, அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசியில் ஒருவரை அணுகி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடுவது, போலி ஆப்கள் மூலம் ஒருவருக்கு தெரியாமலேயே அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, வாட்ஸ்அப் மூலம் மிரட்டுவது, ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி மிரட்டி பணம் கேட்பது  என பல்வேறு சம்பவங்களும் நடந்து வருகின்றன.




அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட  சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக சென்ற சில தினங்களுக்கு முன்பு கூட தேனி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் பெற்ற ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தேனி சைபர் கிரைம் போலீசார் வெளி மாநிலத்திற்கு சென்று பிடித்து வந்து விசாரணை செய்தபோது, அவர்கள் சுமார் 11 கோடி ரூபாய் வரை முறைகேடாக மிரட்டி பணப்பரிவர்த்தனை செய்ததும், மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக  5 பேரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8088765749 என்ற  எண்ணிலிருந்து அலுவலர்கள் உட்பட பல நபர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.




அந்த குருஞ்செய்தியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்துடன் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை நலம் விசாரிப்பது போல் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இதனை கண்டு சந்தேகமடைந்த தேனி மாவட்ட அரசு அலுவலர்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கன்னடம் மற்றும் இந்தியில் தெளிவற்று பேசியுள்ளார். குருஞ்செய்தியானது தவறான செயல்களை செய்திட நோக்கில் அனுப்பப்பட்டு உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. . இதையடுத்து ஆட்சியர் கவனத்திற்கு அலுவலர்கள் எடுத்துச் சென்றதன் பெயரில் ஆட்சியர் உடனடியாக இந்த தவறான செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது .




அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மேற்கண்ட எண்ணிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ  தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் இதுபோன்ற அரசுத்துறை அலுவலர்கள் உட்பட அனைவரிடத்திலும் இந்த ஆன்லைன் மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண