மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு எதிராக மருத்துவமனை பகுதியில் மாநகராட்சி அனைத்துப் பிரிவு பணியாளர்கள்  சார்பில் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 


அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை இடையே ஏற்பட்டிருக்கக்கூடிய மோதல் அதிகரித்துள்ளதை அரசு மருத்துவமனை முன்பு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன

 


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

 

இந்நிலையில் மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக் கோரி அரசு மருத்துவர்கள்  கடந்த ஆறு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதே போன்று மாநகராட்சி சுகாதாரத்துறை மருத்துவர்களும், செவிலியர்களும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நகர்புற சுகாதார மையத்தில் இருந்து மகப்பேறுக்காக அனுப்பிவைக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவர்களுக்கு எதிராக மாநகராட்சி அனைத்துப் பிரிவு பணியாளர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 






 

அதில் தமிழக அரசே! சுகாதார துறையே!! அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்கள் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்திடு, தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திடு, தனிப்பட்ட நபர்கள் பிரச்சனையில் அப்பாவி நோயாளிகளை பழி வாங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடு, போராடத் தூண்டாதே என அச்சிடப்பட்டுள்ளது. 

 

இந்த சுவரொட்டிகள் அனைத்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சுற்றிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அதனை படிக்கும் நோயாளிகளை குழப்பத்தில் ஆழ்த்துவதால் அதனை அரசு மருத்துவமனை ஊழியர்கள் கிழித்தெறிந்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை இடையே ஏற்பட்டிருக்கக்கூடிய மோதல் அதிகரித்துள்ளதை அரசு மருத்துவமனை முன்பு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.