நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதியதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசின், முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்த முதல் நாளே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு,  தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், அனைத்து மகளிரும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் உள்ளிட்ட திட்டங்களில் முதல் கையெழுத்திட்டார்.




 


இதன்படி, மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும்  அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சார்பில், பெண்களுக்கான இலவச பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நகரப் பேருந்துகளில் அதிக அளவிலான பெண்கள் பயணம் செய்ய தொடங்கினர்.


மகளிருக்கு மட்டும் இலவசம் என்ற திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், சில திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக பயணிக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 



நகரப்பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1,358 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 40% இருந்து 60% ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழ்நாடு அரசுத்தரப்பில் இருந்து போக்குவரத்து கழகத்திற்கு 1,200 கோடி கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு டிப்போக்களில் நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து கழக டிப்போவில் இருந்து கம்பம்-குமுளி இடையே தினசரி மூன்று நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஒரு பேருந்து தலா 8 ட்ரிப் என இந்த மூன்று பேருந்துகளும் சேர்ந்து மொத்தம் 24 முறை கம்பத்தில் இருந்து குமுளிக்கு சென்று வந்தது. தற்போது  இதில் இரண்டு பேருந்துகள் குறைக்கப்பட்டு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் காலையில் தோட்ட வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.




குறிப்பாக ஆண்களுக்கு நகரப் பேருந்து கட்டணம் என்றாலும், நகரப்பேருந்து மட்டுமே ஒரு சில பேருந்து நிறுத்தங்களில் நிற்பதால் ஆண்களும் அதிக அளவில் இந்த நகரப்பேருந்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நகர பேருந்துகளில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. பெண்கள் இலவசம் என்பதால் முண்டியடித்துக் கொண்டு நகர பேருந்து பயணம் செய்ய தேர்வு செய்கின்றனர். ஆண்களும் சில குறிப்பிட்ட இடங்களில் இறங்குவதற்காக இந்த நகரப்பேருந்து தேர்வு செய்கின்றனர். தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே உள்ளதால் அதிக அளவிலான கூட்டம் இந்த நகரப் பேருந்தில் காண முடிகிறது.


கொரோனா பரவலுக்கு இடையே அரசு பேருந்துகளில் பயணிக்க சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்த இருந்தாலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்துகளில் ஏறும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இதுவே மீண்டும் கம்பம் பகுதியில் கொரோனா பரவலுக்கு அடுத்தகட்டமாக பார்க்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் பழைய நிலைக்கே பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.