கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.26 அடியாக உள்ளது. வினாடிக்கு 3 ஆயிரத்து 403 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 95 கன அடியாக குறைந்தது, இந்த நிலையில் இந்த அளவானது மேலும் குறைந்து இன்றைய தினம் வினாடிக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து 69 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் இருப்பு 39.28 டி.எம்.சி உள்ளது.



கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்வரத்து குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணையிலிருந்து 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 114.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 882 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,260 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி நீர் கடந்த ஆம் 24ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை 25ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 95 கனஅடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று ஆயிரத்து 969 கன அடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.