பெண் தொழில் முனைவோர் பயிற்சி பாசறை பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி பாசறையில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செம்மை மாதர் 2.0 என்ற தலைப்பில் பயிற்சி பாசறை இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த பயிற்சி பாசறையில் பெண்கள் உற்பத்தி செய்யும் இயற்கை உணவுகள், மூலிகை சார்ந்த உணவுகள், மூலிகை சார்ந்த அழகு சாதன பொருட்கள், சிறுதானிய வகைகளில் செய்யும் உணவுப் பொருட்கள், நாட்டு சக்கரை மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பெண்கள் தங்கள் திறமைகளை காட்டி உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அவற்றை இன்றைய அறிவியல் வளர்ச்சியின் மூலமாக எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது,
அவற்றை பேக்கிங் செய்வது, பிராண்ட் பெயர் உருவாக்குவது, விற்பனை இலக்கை நிர்ணயம் செய்வது, மற்றும் தற்போது உள்ள டிஜிட்டல் உலகில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் உள்ளிட்டவைகளில் எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பெண் தொழில் முனைவோரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த மூன்று நாட்கள் நடைபெறும் பாசறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளாக உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சந்திப்பின் மூலம் பெண்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்ற வகையில் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் ஏற்றுமதி மண்டல மேலாளர் சோபனா குமார், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம், தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய அதிகாரிகள், தமிழகம் முழுவதும் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர், பெண் விவசாயிகள் உள்ளிட்டோர் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.