சிவகங்கை தொல்நடைக் குழு, தொன்மைகளைப் பாதுகாப்பதும் ஆவணப்படுத்துவதும் அதை மாணவர்களிடையே பொது மக்களிடையே வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமான பணியை சேவை மனப்பாண்மையோடு செய்து வருகிறது. மேலும் தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு மாணவர்களை பொதுமக்களை ஒருங்கிணைத்து தொல்நடை பயணம் அழைத்துச் செல்லும் பணியையும் செய்து வருகிறது. அவ்வகையில் சிவகங்கை தொல்நடைக் குழு ஒருங்கிணைத்த தொல் நடைப் பயணம் ஐந்தில் முதல் நிகழ்வாக தொல்நடைப் பயணம் 5 கையேடு வெளியிடப்பட்டது. இக்கையேட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவின் பெருமைமிகு வழிகாட்டி தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் வெளியிட தொல்நடைக் குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனருமான பா. இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, பல்லுயிர் பாரம்பரிய தலம் பார்வையிடப்பெற்றது. அதாவது அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு 2022 நவம்பர் 22ஆம் நாள் அறிவித்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் ஆகும். ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவமும் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள், மற்றும் மூன்று தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குகின்றன.
இவ்விடத்தின் சிறப்புகள் விளக்கப் பெற்றதோடு பல பெருங்கற்கால அமைப்புகள் உள்ள இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை சிவன் கோவில். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடை வரையில் தாய்ப்பாறையால் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளமை துவார பாலகர்கள் சிலையை அடுத்து வெளியே புடைப்புச் சிற்பங்களாக சிவமூர்த்தங்களுள் ஒன்றான லகுலீசர் சிற்பமும் அதனை அடுத்து விநாயகர் சிற்பமும் பார்வையிடப் பெற்றன சமணப்படுக்கையில் 1971இல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 'நெல்வெலி செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த நல்முலாகை' எனும் தமிழிக் கல்வெட்டு. இயற்கை குகைத்தலத்தை அடுத்து மகாவீரரின் புடைப்புச் சிற்பம் மற்றும் அதன் கீழ் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகியன பார்வையிடப் பெற்று விளக்கப் பெற்றன.
அடுத்ததாக மாங்குளம் மீனாட்சிபுரம் தமிழிக் கல்வெட்டு பார்வையிடப் பெற்றது தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன. இங்கு மூன்று குகைத்தளங்களில் சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன ஒவ்வொரு இடத்திலும் இரண்டு இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் என ஆறு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் வெள்ளறை எனவரும் ஊர் இன்றைய வெள்ளரி பட்டியாக கருதப்படுகிறது. போன்றவை விளக்கப்பெற்றன மூன்றாவதாக அமைந்துள்ள குகைத்தளத்தளம் மற்றும் தமிழி எழுத்துகள் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இருப்பதை குழந்தைகள் நினைவூட்டினர்.
அங்கிருந்து திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் அழகர் மலை மேல் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை சென்று முருகனை வழிபட்டனர். அடுத்ததாக ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசனம் பெற்றதோடு 108 திவ்ய தளங்களில் ஒன்றாகவும் உள்ள அழகர்கோவில் சென்றனர். சுந்தரராஜ பெருமாள் மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள், திருக்கல்யாண மண்டபத்தில் நாயக்கர் கால சிறந்த படைப்புகளான நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய சிற்பங்கள் மற்றும் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதி, கோபுர சிற்ப வேலைப்பாடுகள்,திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுறாமல் போன இராயகோபுரம் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள கோட்டை அமைப்புகள் பார்வையிடப் பெற்றன.
பார்வையிடும் இடங்களை சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவநர் புலவர் கா. காளிராசா விளக்கியுரைத்தார். நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மற்றும் இந்நாள் அலுவலர்கள் சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர்கள் என நாற்பதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.