முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்காக அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரை மறைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர் வைத்ததால் அதிமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி.ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று பேனர் வைப்பதற்காக வந்தபொழுது, அதிமுக சார்பில் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுமதி பெற்ற இடத்தில் அதிமுகவினர் வைத்த பேனரை மறைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனரை நிறுவினர்.
இதனால் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளருக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் அதிமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் அதிமுகவினர் வைத்த பேனரை காவல்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பேனர் வைப்பதில் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலலிதா அவர்களது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியகுளம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களது திருஉருவ படத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சையது கான் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா நகரச் செயலாளர் சமது மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.