இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 


இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் 2 விக்கெட்களும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 


முதல் இன்னிங்ஸின் முதல் நாளில் என்ன நடந்தது..? 


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.  இந்தநிலையில்தான், இந்திய அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப், தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப்பை வெளியேறி அசத்தினார். 


விக்கெட்டை விடாமல் தடுக்க முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இருந்த பேரிஸ்டோவ் 38 ரன்களிலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை விட்டுகொடுத்தனர். 






நங்கூடமாய் நின்ற ஜோ ரூட் கடுமையாக போராடி சதம் கண்டார். இந்தியாவிற்கு எதிராக ஜோ ரூட்  அடித்த 10வது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ ரூட்டுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் தன் பங்கிற்கு 47 ரன்கள் எடுத்து அவுட்டானர். 


இவ்வாறாக இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. 


தொடர்ந்து, 2 நாள் ஆட்ட தொடக்கத்தில் ராபின்சன் 58 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட்டாக, அடுத்து வந்த பஷீர் மற்றும் ஆண்டர்சனை டக் அவுட் செய்தார் ஜடேஜா. இதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.