தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (52). இவருடைய மனைவி சின்னத்தாய். இவர்கள் இருவரும் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்தனர்.
வேல்முருகன் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சின்னத்தாய் மயங்கி விழுந்து விட்டதாக கூறி அவரை வேல்முருகன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது.
EB Num Link Aadhar: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
இந்நிலையில், சின்னத்தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய அண்ணன் பாண்டி ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வேல்முருகன் தனது மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாரன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சின்னத்தாயை கொலை செய்த வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்