டிசம்பர் மாத்தின் தொடக்கத்தில் ராணுவ திரும்பபெறும் நடவடிக்கைக்கு முன்பாக, அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்தது. டிசம்பர் 9ஆம் தேதி நடந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னர், அப்பகுதியிலிருந்து இர தரப்பு வீரர்களும் பின்வாங்கியிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


தவாங்கில் நடந்த மோதல் இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.


இதை தொடர்ந்து, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, நாடாளுமன்றம் இன்று கூடியவுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத காரணத்தால் மதியம் 12 மணி வரை சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்துவைத்துள்ளார்.


இதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீன விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், "எதிர் கட்சிகள் சீனா விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கேட்கின்றன. 


நமது நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும் அதே வேளையில், எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து அரசாங்கம் எங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


 






ராணுவத்தை விமர்சிக்கும் கேள்விக்கு இடமில்லை. கேள்வி நாட்டின் அரசியல் தலைமை பற்றியது. அவர்கள் ஏன் தங்கள் வேலையைச் செய்ய மாட்டார்கள் அல்லது அரசியல் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? ராணுவத்திடம் விளக்கம் கேட்கவில்லை, அரசியல் தலைமையிடம் விளக்கம் கேட்கிறோம்" என்றார்.


முன்னதாக, விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் , "இந்திய - சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய நிலையை சீனா தன்னிச்சையாக மாற்றி அமைக்க இந்திய ராணுவம் அனுமதிக்காது.


இதுவரை இல்லாத அளவுக்கு சீன எல்லையில் இந்தியா ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் குவிக்கப்பட்டு வரும் சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.