கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார்.
அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், திரு ஞாயனம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கில் ஆஜராக வந்த முக அழகிரிக்கு நிதி அமைச்சரின் ஆதரவாளரான விசா பாங்கின் உள்ளிட்ட திமுகவினர் அவரை வரவேற்று நேரில் சந்தித்து பேசினர். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட முக அழகிரி திமுக அரசின் செயல்பாடு குறித்து கேட்ட பொழுது, அதற்கு பதில் அளிக்க மறுத்தார். திமுக அரசின் செயல்பாட்டை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நீதிமன்றத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்