தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி வந்து கும்பக்கரை ஆற்றை அடைகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை ,கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியில் ஏற்பட்டுள்ள பெருக்கை வன ஊழியர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கும்பக்கரை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் கூறுகையில், கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள வனப்பகுதியில் இருந்து அதிவேகமாக கும்பக்கரை அருவியை நோக்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அருவி பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கும்பக்கரை அருவிப்பகுதியில் வன ஊழியர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர் கன மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர்வரத்து உள்ளது உபரிநீராக 300 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை வலியுறுத்தி உள்ளனர்.
வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு; 5 மாவட்டங்ளுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழையால் அணையின் நீர் வரட்த்து வினாடிக்கு 500 கன அடி வீதம் உள்ளது. அணையிலிருந்து உபரி நீராக வினாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை வலியுறுத்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்